Home » இலக்கியம்

கசகறணம் :வித்தியாசமான ஒரு நல்ல நாவல்

18 October 2011 பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 176 No Comment

சகறணம், விமல் குழந்தைவேல், காலச்சுவடு பதிப்பகம், 2011 யூலை, ப. 248, இந்தியா. 175.00

இது பல வகைகளிலும் வித்தியாசமான ஒரு நாவல். மட்டக்களப்புத் தமிழ் மொழியிலேயே கதை கூறப் பட்டுள்ளுமையும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கலந்து வாழுகிற ஒரு பகுதியான அக்கரைப்பற்றுப் பகுதியின் அன்றாட வாழ்வை ஒரு சந்தையை மையப்படுத்திய ஒரு கதையாகக் கூறுவது ஒரு முக்கியமான பண்பு. தேசிய இனப் பிரச்சனையின் விளைவான இன ஒடுக்கல் விடுதலைப் போராட்டத்துக்கு வழியமைத்த பின்பு, ஒன்றுபட்டு நின்ற இரண்டு சமூகங்களைப் பிளவுபடுத்தி அப் பிரதேசத்தைச் சீரழித்ததைக் கூறுவது இன்னொரு முக்கியமான பண்பு. குறுகிய இனப் பார்வையைத் தாண்டித், தமிழ்-முஸ்லிம் இன முரண்பாடு எவ்வாறு தனிமனித உறவுகளில் தொற்றிப் பகை வடிவம் பெறுகிறது என்பதயும் அவ்வாறு பகையாகாமல் தடுக்கச் செயற்பட்ட நல்ல மனிதர்களையும் நாம் கதையினூடு அறிகிறோம்.

மிக முக்கியமாகக், குறிப்பாக யாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல் மனிதரது இயல்பான நடத்தைக்குரியனவாக நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளமை மெச்சத்தக்கது.

நாவல் என்ற வகையில் கனதியான கதைப்பொருளைக் கொண்டிருந்தும், சுவைபடக் கதை கூறும் ஆசிரியரின் ஆற்றல் பொதுவாகவே பல இடங்களிலும் நேர்த்தியுடன் வெளிப்பட்டபோதிலும், சில குறைபாடுகள் வாசகர்களிடம் மிகுதியான பொறுமையை வேண்டுகின்றன. முக்கியமாக, இரண்டு பாகங்களாக அமைந்துள்ள இந் நாவலின் முதற் பாகத்தில் கதையின் ஓட்டத்திற்குத் தடையாக என்று சொல்லக் கூடிய அளவுக்கு வெறுமனே சுவாரசியங் கருதித் தரப்பட்டுள்ள விவரங்களைக் கூறவேண்டும். அடுத்ததாக, முதற் பகுதியில் கதை கூறுபவரது மொழி வரன்முறையானதெனக் கூறப்படுகின்ற மொழி வழக்குக்கும் பிரதேச உரைநடை மொழி வழக்குக்குமிடையே ஊசலாடுவதைக் கூறலாம். மட்டக்களப்பு மொழி வழக்;குடன் பரிச்சயமான வாசகருக்கும் சொற்களின் அச்சு வடிவம் இடைஞ்சல் ஏற்படுத்தலாம். ஏனெனில் வாக்கியங்களின் சொற்பிரிப்பு பேச்சு மொழியின் சொற்பிரிப்புடன் சிறிது முரன்படுகின்ற போதும் வாசிப்பில் தடங்கல் ஏற்பட இடமுண்டு;. பிராந்திய மொழியுடன் ஓரளவு பரிச்சயமுள்ள  வாசகர், முற்பகுதியின் முற்பாதியைக் கடந்துவிட்டபின்பு வாசிப்புப் பெருமளவும் எளிதாகி விடுகிறது. எனினும், அக்கறையுள்ள ஒரு வாசகருக்குக் கூட, முற்கூறிய குறைபாடுகள் வாசிப்பைத் தொடர்வதற்கு தடையாகலாம்.

பொதுவாகவே தமிழகத்தில் உள்ள வாசர்களுக்குத் தமிழ்நாட்டுப் பிரதேச-சமூக வட்டார வழக்குகள் பிரச்சினையாகக் கூறப்படுவது குறைவு. ஈழத்துப் படைப்பொன்றின் மொழி வழக்குச் பெருமளவும் செம்மையான மொழி வழக்கைச் சார்ந்திருக்கும் போதிலும் அதற்கு அடிக்குறிப்பு வேண்டுகின்ற சூழல் அங்குண்டு. இந்த நாவலுக்கு பின்னிணைப்பாக தரப்பட்டுள்ள பிரதேச மொழிச் சொற்களுக்கான விளக்கங்கள் 100 சொற்களை மட்டும் தெரிந்து எந்தவிதமாக தர்க்கரீதியான வரிசைப்படுத்தலும் இல்லாது (ஒரு சில தவறாகவும்) வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான குறை மிகுந்த ஒரு “அகராதி” தேவையா என்பது தான் என் மனதில் எழுந்த கேள்வி. ஒரு நல்ல படைப்பாளி தனது நூலை வெளியிடப் பிறரின் தயவை எதிர்பார்க்கிற அவலத்தின் ஒரு வருந்தத்தக்க வெளிப்பாடாகவே இதைக் கூற முடியும்.

நூலின் வெளிப்புறமும் அச்சமைப்பும் நேர்த்தியாக உள்ளமை மெச்சத்தக்கது. பௌசர் வழங்கிய முன்குறிப்பில் “நமது விமர்சன உலகில் உள்ள படைப்பு சார்ந்த குறைபாடுகளை மீறி… என்னை இப்படைப்பு பாதித்திருக்கின்றது” என்ற கூற்று எதைக் குறிக்கின்றது என்று விளங்கவில்லை. படைப்புச் சார்ந்த தராதரங்கள் இந்த நூலில் பாராட்டத்தக்களவுக்குப் பேணப்பட்டுள்ளன என்பதே என் எண்ணமாகும்.

எனினும் இந்த நூலை வெளிக்கொண்டுவர உதவிய பௌசருக்கு நாமும் நன்றியுடையோராவோம்.

இந்த நூல் தமிழ் மக்களின் இன்றைய நிலை பற்றிய அக்கறையுள்ள அனைவரும் கவனத்துடன் வாசிக்கத் தகும் என்று பரிந்துரைப்பேன்.

சிவா

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.