மக்கள் அணிதிரண்டு தம்மைத் தாமே தற்காக்கும் நடவடிக்கைகளை எமது கட்சி வரவேற்கின்றது – NDMLP
ஊடகங்களுக்கான அறிக்கை 21.08.2011
அண்மைய வாரங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள “கிறீஸ் பூதம்” என்னும் பெயரிலான மர்ம மனிதத் தாக்குதல் பேரினவாத ஒடுக்குமுறையின் மற்றொரு கோர வடிவமேயாகும். இது தற்செயலானதாகவோ அல்லது கீழ்மட்டத்திலிருந்தோ தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து நன்கு திட்டமிட்ட உள்நோக்க அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே நம்பப்படுகிறது. இத்தகைய கிறீஸ் பூத மர்ம மனிதர்களால் மலையகத் தமிழ் மக்களும் வடக்குக் கிழக்கின் தமிழ் முஸ்லீம் மக்களுமே தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகிறார்கள். இதனால் அச்சம் பீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்கள் அன்றாட அலுவல்கள் தொழில்களுக்குச் செல்ல முடியாதுள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் கடும் பாதிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் ஆளும் அதிகாரத் தரப்பில் இருந்து இது பற்றி அக்கறைப்படுவதாகவோ அல்லது அதற்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவோ இல்லை. அதனால் இக் கிறீஸ் பூத மர்ம மனிதத் தாக்குதல்கள் அதிகாரபீடத்தின் ஆசீர்வாதத்துடன் இடம்பெறுவாதாகவே நம்பவேண்டியுள்ளது. எனவே தொடரும் மக்கள் மீதான இக் கிறீஸ் பூத மர்ம மனிதத் தாக்குதல்களை எமது புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளை மக்கள் அணி திரண்டு தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ளும் வகையில் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் எமது கட்சி வரவேற்கின்றது. அத்துடன் அக் கிறீஸ் பூதத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அரசாங்கம் உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
மலையகத்தின் காவத்தைப் பிரதேசத்தில் ஆரம்பித்த “கிறீஸ் பூத” மர்ம மனிதத் தாக்குதல்கள் மலையகத் தேயிலைத் தோட்டங்களுக்குப் பரவிக் கொண்டன. அங்கிருந்து கிழக்கு மாகாணத்திற்கும் வடக்கின் வன்னிப் பிரதேசத்திற்கும் இப் போது யாழ்க்குடாநாட்டிற்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. தமிழர், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களைக் குறிவைத்தே மேற்படி கிறீஸ் பூதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வரும் அதேவேளை குறிப்பாகப் பெண்கள் இலக்கு வைத்துத் தாக்கப்படுவதும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டு இரத்தம் சிந்த வைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் பல்வேறு ஊகங்களையும் சந்தேகங்களையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் இக் கிறீஸ் பூத மர்ம மனித அச்சுறுத்தல்களுக்கு அவ்வப் பிரதேசங்களில் பொலிசாரும் பாதுகாப்புத் தரப்பினரும் ஒத்துழைப்புக் கொடுத்து வருவதை மக்கள் தாம் நேரடியாகக் கண்டதாகவும் தெரிவித்து வருகின்றனர். மக்களைத் தாக்கி அச்சுறுத்தி வரும் கிறீஸ் பூதத்தைக் கண்டு பிடித்துக் கைது செய்ய இயலாத பொலிசார் அதனைத் துரத்திச் சென்று பிடிக்க முற்படும் மக்கள் மீதும், தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ள அணி திரளும் மக்கள் மீதும் தாக்குதல்களும் கைதும், தடுத்து வைப்பும் செய்து வரும் வினோதத்தையே காண முடிகிறது. இவ்வளவும் நடந்த பின்பும் ஜனாதிபதியோ அன்றி, உயர் பாதுகாப்புப் பீடமோ இக்கிறீஸ் பூத மர்ம மனிதத் தாக்குதல்கள் பற்றி மௌனம் காத்து வருவது ஆச்சரியத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே ஜனாதிபதி இவ்விடயத்தில் உடன் தலையிட்டு மேற்படி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கிறீஸ் பூத மனித மர்மத் தாக்குதல்களை நிறுத்தவும் மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என எமது கட்சி வற்புறுத்திக் கூறுகின்றது.
சி. கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்,
புதிய ஜனநாயக (மார்க்சிய லெனினிய) கட்சி.











Leave your response!