உயர ஏறுவோம் (கவிதை)
முன் குறிப்பு…
என்மேல் எந்த தேசியச் சாயமோ, சாதியச் சாயமோ, மதச் சாயமோ பூசிவிடாதீர்,
உலக அடிமைகளில் ஒருவனாக
நான்
வெறுமனே,
என்னையும் அவனையும் பற்றிய ஒரு கதை சொல்லப் போறேன்.
இங்கே நான் என்பது நான் மட்டுமோ; அவன் என்பது அவன் மட்டுமோ அல்ல,
நான் இல்லாத எல்லாமுமே அவன்….
*
முன்னொரு நாளில்
நட்சத்திரக் கொடியுடன் வந்தான் ஒருவன்
தான் முகிலை நோக்கி உயர ஏறத் துணை செய்ய வேண்டும்
என்றான்.
எனைத் தன்னால் வானில் பறக்க வைக்க முடியும் என்றே
பல கதைகள் சொன்னான்
அவன் மாய வார்த்தைகளில் மயங்கிய
நானும்
குப்புற நின்று என்மேல் அவனை ஏறச் சொன்னேன்
என் கைவிரல் நசுக்கியே என் தோள் மேல்
ஏறி நின்றான்.
அவன் அழுத்தமும் பாரமும் தங்காமல் நான் விழி பிதுங்கி நிற்க
என் கைவிரல்களையும் என்னையும் குறை சொன்னான்.
என்னை சாட்டையால் அடித்து உயரப் பறக்கச் செய்தான்.
உயரப் பறக்கும் சிந்தனையில் என் வலிகளும் காயங்களும்
மறந்தே போயின.
அங்கே..
வானில் எனைப்போல் பலரையும் அவனைப்போல் சிலரையும் காணலுற்றேன்,
உயரப் பறந்த சிலரும் அவனும்
ஏதோ பெயர் தெரியாத குளிர் நாட்டில் இறங்கி ஏதோ பெயரில்
கூட்டம் போட்டார்கள்.
எனைப் பற்றி எனக்கு அறிவிக்காமலே ஏதேதோ தீர்மானம் எடுத்தார்கள்.
எனக்குத் தெரிந்து என்னிடம் இருக்கும் அடையாளங்கள் பலவும்
அவனால் தீர்மானிக்கப்பட்டவை.
என்மேல் அவன் பறப்பது பற்றி என்னில் சிலர் பெருமையாக
பீத்திக்கொள்கிறார்கள்.
அவனால் மட்டுமே என் கை விரல் காயங்களுக்கு மருந்து தர முடியும் என்றும் பேசிக்கொள்கிறார்கள்,
என் விரல்களை நசுக்கியனும் அவனே என்பதை மறந்தே!
தனக்கு விரும்பிய நிறங்களில் என்னை மாற்றி விடுகிறான்,
என் நிறம் பற்றியும் குற்றப்பத்திரிகை தயாரிக்கிறான்.
தன் குப்பைகளை என்மேல் கொட்டி வேடிக்கை பார்க்கிறான்.
அதற்கும் ஒரு அறிக்கை தயாரித்து அதிலும் என்னை குற்றம் காண்கிறான்.
என்மேல் அவன் ஏறிநிற்றலின் அழுத்தம் இன்னும் இன்னும்
கூடிக்கொண்டே போக…
வலி நிவாரணியாக சில போதை மருந்துகளை அவன் தலைமை தாங்கும்
நிறுவனங்கள் ஆங்காங்கே வலிந்தே தந்தும் விடுகின்றன,
என் விடுதலை பற்றி யார் யாரிடமோ பேசியும் கதைத்தும் வருகிறான்.
யாரிடம் இருந்து விடுதலை என்பது பற்றி மட்டும் அவன் பேசுவதேயில்லை.
அவனைச் சுமந்து பறந்து கொண்டிருக்கும் எனக்கு ஓய்வு தர அவன் நாட்டில்
ஒரு பட்டமரம் தருவதாக என்னில் சிலரோடு பேசிக்கொள்கிறான்.
என் சுயம் என்ன என்பதை மறந்தே!
என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை.
அடைவதற்கு ஏதோ இருப்பதாய் என்னில் சிலர் பேசிக்கொள்கிறார்கள்
எனக்கான முடிவுகள் அவனாலும் என்னில் சிலராலும் மட்டுமே எடுக்கப்படுகின்றன.
நான் என்பது நான் மட்டுமோ; அவன் என்பது அவன் மட்டுமே அல்ல,
ஒன்றை மட்டும் அவன் மறந்தே போயிருக்கிறான் அவன் உயரப் பறப்பது என்னிலே ஏறியே !
என்றாவது ஒருநாள் அவன் நசுக்கிய விரல்களில் வழியும்
என்
சிகப்பு ரத்தங்கள்
அவனை
அவனுக்கு சொந்தமான
வெள்ளை அறையில் அடைத்தே வைக்கும் காலம் வரும்
அன்று நான்
எவரதும் கை விரல்களையும் நசுக்காமலும்
எவருக்கும் ஏவலாளி ஆகாமலும்
ஒரு பறவையைப்போல்
உயர ஏறுவேன்.
உயர ஏறுவோம்…..
–
யுகன்












Very nice poem. Good creativity in a different view. Keep it up Juhan.
Leave your response!