Home » இலக்கியம், சமூகம்

சிங்கள நாட்டுப்புறக்கதைகள் சில அனுபவங்கள்

13 October 2010 பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 706 2 Comments

அழிந்துக்கொண்டு வரும் கிராமத்து வாழ்வியலைச் சிறிதேனும் ஞாபகப் படுத்தும்   கூறுகளாக காணப்படும் உன்னத இலக்கியங்கள் நாட்டார் இயலாகும். நாட்டார் இலக்கியங்களில் நாட்டுப்புறக் கதைகள் பலராலும் இன்றும் ரசித்து அனுபவிக்கக் கூடியனவாகக் காணப்படுகின்றதற்குக் காரணம் இக் கதைகள் நமது வாழ்வியலுடன் கலந்திருப்பதேயாகும். தமிழ் நாட்டுப்புறக் கதைகளுக்கும் சிங்கள
நாட்டுப் புறக்கதைகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.   இதற்குக் காரணம் நாடடுப்புறக்கதைகள் அனைத்துமே உழைக்கும் வர்க்கத்தின் இலக்கியங்களாக காணப்படுவதாகும்.

உலகெங்கிலும் வாழ்ந்து வரும் மனித குலமானது சூழல் வேறாக இருந்த போதும், இனம் மதம் நிறம் வர்க்கம் ஆகிய அனைத்திலும் வேறுப்பட்டு இருந்த போதும், மனித குலத்தின் அனைத்து மானுடரதும் அடிப்படைத்தேவைகளும் உணர்வுகளும் அனேகமாகச் சமாந்தரமானவை. வரலற்றை வெற்றிகொள்வதற்காக மனித குலம் முகம் கொடுத்த வெற்றிகள் வீரம் கண்டு பிடிப்புகள் என்பவற்றுடன் மனிதனது தோல்விகள் கபடத்தனங்கள் கயமைகள் போன்ற ஆனுபவங்களை இன்றும் எமக்குக் காண்பிக்கும் காலத்தின் கண்ணாடியாக இருப்பவை நாட்டுப்புற இலக்கியங்களே.

அத்துடன் மிகவும் தத்ரூபமாக எமக்கு நமது முன்னோர்களின் வாழ்வியலை எடுத்தியம்பும் ஊடகமாக நாட்டார் கதைகளே காணப்படுகின்றன.

ஆண்ட பரம்பரையினர்களான அரசர்களதும் ஜமீன்தார்களதும் சுகபோகங்களை அனுபவித்த சமயத் தலைவர்கள் நிலப்பரபுக்கள் பெரிய கங்காணிமார்கள் போன்றோரின் வீரப்பிரதாபங்களையும் அவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்தவர்கள் தொடர்பான தகவல்களையும் புத்தகங்கள் காவியங்கள் புராணங்கள் இதிகாசங்கள் என்பவற்றின் மூலம் வாசிக்கக் கூடிய போதும் சாதாரண மக்களின் அனுபவங்கள் எங்கும் பதிவு செய்யப்பட்டில்லை என்றே கூற வேண்டும்.

அவர்கள் தொடர்பான விடயங்களை பரம்பரை பரம்பரையாக தெரிந்து கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்ட வாய் மொழிக் கதைகள் உலகின் உயர்ந்த இலக்கிங்கள் என்ற மதிப்பைப் பெறுகின்றன. மனித குலத்தின் மொழிப் பயன்பாட்டுக்காலம் முதல் இன்று வரை மனித வரலாற்றிற்குச் சான்று பகரும் உன்னத ஊடகமாக வாய்மொழி இலக்கியங்கள் காணப்படுகின்றன.

பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவை அரச குமாரர்களும் அரண்மனை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் குருகுலக் கல்வியைத் தொடர்வதற்கு விருப்பப்படாத நேரங்களில் அவர்களுக்கு மிக எளிமையாகக் கல்வி புகட்ட ஏற்பட்ட வாய்மொழி கல்வி முறையே என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் இதிலும் கல்வியே கற்காத ஒருவன் பஞ்சதந்திரக் கதைகள் அனைத்தையும் கற்றான்
என்றால் அவன் பூரணமானவன் என்ற மதிப்பைப் பெறுவான் என்று கூறப்படுகின்றது.

சிங்கள நாட்டுப்புறக் கதைகளை நோக்கும்போது வயலும் வயல் சார்ந்த கதா பாத்திரங்களுமே அதிகமாகக் காணப்படுகின்றன மலையக நாட்டுப்புற இலக்கியங்களை நோக்கும் போது தேயிலையும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் அம்சங்களையும் முனைப்பாகக் கொண்டு படைக்கப்பட்ட பாடல்களையே அநேகமாகப் பதிவிற்கு கொண்டுவந்துள்ளனர்.

சிங்கள இலக்கியத்தில் நாட்டுப்புறக்கதைகளை கெமி கதா(கிராமத்துக் கதைகள்) என்று கூறுவார்கள். சிங்களக் கிராமத்துக் கதைகளிலே வரும் மிகப் பிரதான பாத்திரங்களாக கமரால என்னும் விவசாய தொழிலாளியும் கமஹாமினே என்னும் விவசாயியின் மனைவியுமே காணப்படுவார்கள் இந்த வகையில் மிகப் பிரசித்திப்பெற்ற மாதன முத்தா கதா பாத்திரமும் அவரின் சீடர்களின் முட்டாள்த்தனமான செயற்பாடுகளும் தொடர்பான கதைகளை நாம் வாசித்து அனுபவித்துள்ளோம்.

முன்னைய காலங்களில் கிராமத் தலைவராக இருந்த சிங்கள நாட்டாமை ஒருவரே இந்த மாதன முத்தா இவரது கொடுமைகளைத் தாங்க முடியாத பொது மக்கள் இவரைப் பழி வாங்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட இந்த கதைகளினூடாக தங்களின் எதிர்ப்புணர்வைக் காட்டியுள்ளார்கள் என்பதே இந்த கதைகள் இன்றும் நிலைத்திருப்பதற்கு காரணமாக இருக்கின்றது.

ஆண்ட பரம்பரையினரின் ஆதிக்கச்செயற்பாட்டினை எதிர்க்கவும் விமர்சிக்கவும் சாதாரண மனிதர்கள் இலக்கியங்களை ஆயுதமாகக் கொண்டனர் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த மாதன முத்தா கதாபாத்திரமாகும்.

இவை மட்டுமல்லாமல் அரசர்களுக்கு அறிவூட்டும் கதைகளும் காணப் படுகின்றன. இந்த வரிசையில் மிகவும் பிரபலமான கதைகளாக கெகில்லே ரஜ்ஜிருவோ என்னும்  கெகில்லே அரசனது கதைகள் காணப்படுகின்றன. இவற்றின் பிரதான கதாபாத்திரம் அந்தரே என்னும் அரசவை விகடகவியாவான் இதற்கு ஒத்த கதாபாத்திரமாகத் தமிழ் மொழியில் தெனாலி இராமன் கதைகள் காணப்படுகின்றன.
ஒரு நாள் கெகில்லே அரசன் தனது அமைச்சர்களைப் பார்த்து முன்னால் இருக்கும் பைரவ மலையைய் காட்டி இந்த மலை என்ன செய்கின்றது என்று கேட்டான் அதற்கு அரசனுக்கு என்றும் முகஸ்துதி செய்பவர்களும் பொய்ப் புகழ் பாடுபவர்களும் சின்னச்சின்னச் சலுகைகட்காய் இல்லாதவற்றை இருப்பதாகக் கூறும் அரசவை அமைச்சர்களும் அரசனைப் பார்த்து “அரசே உங்களின் நீதியான ஆணைகளைக் கேட்டு அந்தமலை நடுங்குகின்றது” என்று கூறினார்கள். இதைக்கேட்ட அரசன் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தரேயை நோக்கி அந்தரே என்ன ஒரு சத்தத்தையும் காணவில்லை என்று கேட்க “எனக்கென்றால் மலை நடுங்குவது போன்று தெரியவில்லை மலை கடுமையான யோசனையில் இருப்பது போலவே தெரிகின்றது” என்றான். அதற்கு அரசன் “ஏன் யோசித்துக் கொண்டு இருக்கின்றது?” என்று கேட்க அதற்குப் பதிலாக அந்தரே  “இவ்வாறு முகஸ்துதி பாடும் பொய்யர்களிடம் எமது அரசரும் ஏமாந்து போகின்றாரே என்று மலை யோசிக்கின்றது” என்று கூறினான் இந்தக் கதை பல்லாயிரம் உண்மைகளையும் பல கோடி உவமைகளையும் எமக்கு எடுத்தியம்புகின்றது.

உலக நாட்டார் கதைகளை நோக்கும் போது அரசரை எதிர்த்துக் கதை செய்ய முடியாத பொது மக்கள் உவமான உவமேய கதைகளாக மிருகங்களைப் பாத்திரங்களாக பயன்படுத்திக் கதை சொல்லும் விதமானது மனித சிந்தனையின் ஆளுமையைக் காட்டிநிற்கின்றது
சிங்கத்தை முட்டாளாக்கிச் சித்தரிக்கும் கதைகள் அரசனைக் கடுமையாக விமர்சிப்பவையாகவும் காணப்படுகின்றன.

சிங்கள நாட்டுப்புறக் கதைகளைப் பற்றிய அனுபவங்களைப் பகிரும் போது மற்றைய மொழிகளிலான நாட்டார் இலக்கியங்களிற் போன்று உழைப்பும் உழைப்புச் சார்ந்த அனுபவங்களும் வேதனைகளும் ஏமாற்றங்களும் கூறப்படுவதாகவே காணப் படுகின்றது. இவற்றில் காணப்படும் நகைச்சுவை உணர்வு நமது மூதாதையர்களின் ஆரோக்கிய வாழ்விற்குக் காரணமாய் இருந்திருக்கலாம்.

சிங்கள நாட்டுப்புறக் கதைகளில் இலங்கையின் ஊர்களுக்குப் பெயர்கள் சூட்டப்பட்ட வரலாறுகளும் சிறந்த வாய்மொழிக்கதைகளாகவே காணப்படுகின்றன. கொத்மலை என்னும் பிரசித்தி பெற்ற ஊர் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தின் அழகிய கிராமம் ஆகும் இந்த கிராமப் பகுதிக்கு பெயர் வந்த கதை மிக சுவாரஸ்யமானதாகும்.

மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்த கமரால ஒருவர் மலை ஒன்றிற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த பொழுது பாரிய சத்தத்துடனான ஒளிப்பிழம்பு ஒன்றைக் கண்டான் அந்த இடத்திலே தங்கக் கலசம் (ரன்கொத) ஒன்று தென்பட்டதாகவும் அந்தத் தங்கக் கலசம் அந்த மலை உச்சியிலேலே புதைந்து போனதாகவும் கூறியதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கண்ணிற்கு எட்டிய இவ்வாறான அதிர்ஷ்டம் கைக்கெட்டாமல் போனது எங்களின் துரதிஸ்டம் என்று இன்றும் கொத்மலை பிரதேச மக்கள் அங்கலாய்ப்பதை காணலாம். இதற்கமய “கொத” கீழிறங்கிய மலை கொத்மலை என்று பெயர் சூட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தமிழில் பாவிக்கப்படும் மலை என்னும் சொல்லைச் சிங்கள மொழியிலும் பிரயோகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் மின்னல் தாக்கம் அல்லது எரிகற்களின் உதிர்வு காரணமான பின்னணிகள் இந்த நிகழ்விற்கு காரணமாயிருக்களாம் என்று நம்பப் படுகின்றது.

இது போன்ற நுர்ற்றுக்கணக்கான நாட்டார் கதைகள் சிங்கள மொழியில் காணப்படுகின்றன. இவை அனைத்துமே உழைக்கும் வர்க்கத்தினரை மகிழ்வித்த இலக்கியங்களாகும். இந்த இலக்கியங்கள் வாழ வேண்டும், பாதுகாக்கப்பட வேணடும், மதிக்கப்பட வேண்டும். நாட்டுப்புற இலக்கிய படைப்பாளிகளை கிரேக்கப் படைவீரர்கள் என்று கார்ல் மார்க்ஸ் புகழ்கின்றார். ஏனெனில் இவர்கள் பாட்டாளி வர்க்கப்
படைப்பாளிகள்.உலக வரலாறு இன்று வாழ்வதற்கு காரணம் இந்த வாய் மொழி இலக்கியங்கள் என்றால் மிகையாகாது.

எமது நாட்டின் இன ஐக்கியத்திற்கு மக்கள் இலக்கியவாதிகளின் படைப்புகள் என்றும் சான்று பகரும். உழைக்கும் மக்கள் வாழும் வரை வாய் மொழி இலக்கியங்கள் உயிர்ப்புடன் வாழ்ந்து உழைக்கும் மக்களின் வாழ்வியலை உலகறியச் செய்யம்.

உசாத்துணை
1. மேமய் அபே கம்பெத்தட நம் லத்தே, ஜயசெனவி உறுலு வௌ, அகுரு பொத் பிரகாசகயோ.
2. கேமி ரச கதா 10, மிஸ்ஸக சூரியபண்டார, வாசனா பொத் பிரகாசகயோ.
3. ஜன கதா 01, தேசிய கல்வி நிறுவகம்
4. சிரி லங்காவே ஜனகதா
5. Motif Index of the Folktale, Smith Thompson, இணையம்

சை. கிங்ஸ்லி கோமஸ்

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

2 Comments »

  • Indli.com said:

    சிங்கள நாட்டுப்புறக்கதைகள் சில அனுபவங்கள்…

    முன்னைய காலங்களில் கிராமத் தலைவராக இருந்த சிங்கள நாட்டாமை ஒருவரே இந்த மாதன முத்தா இவரது கொடுமைகளைத் தாங்க முடியாத பொது மக்கள் இவரைப் பழி வாங்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட இந்த கதைகளினூடாக தங்களின் எதிர்ப்புணர்வைக் காட்டியுள்ளார்கள் என்பதே இந்த கதைகள் இ…

  • Siva said:

    நல்ல கட்டுரை.
    எனக்கு மஹதன முத்தா கதைகள் முழுவதும் தெரியாது. அவற்றிற் பகுதியாவது வீரமாமுனிவரின் பரமார்த்தகுரு கதைகளைத் தழுவியவை என நினைக்கிறேன். ஆசிரியர் தெளிவு படுத்தவாரா?
    தொடர்ந்தும் எழுதுக. வாழ்த்துக்கள்

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.